உலக கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 5-2 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. தடை காரணமாக முன்னணி வீரர் சிவேந்திர சிங் இடம் பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
டில்லியில் உள்ள தயான்சந்த் தேசிய மைதானத்தில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
பலத்த பாதுகாப்பு:நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, உலகின் "நம்பர்-2' அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, இப்போட்டிக்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
கோல் மழை: இத்தொடரின் முதல் சவாலில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வீரர்கள், இம்முறை படுமந்தமாக ஆடினர். அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே லியாம் டி யங் அசத்தல் கோல் அடித்தார். இவரை தொடர்ந்து கிளன் டர்னர்(10 வது நிமிடம்), டெஸ்மண்ட் அபாட்(26வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியாவின் விக்ரம் பிள்ளை 35 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என்ற முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. "பெனால்டி கார்னர்' மூலம் லூக் டோயர்னர் (42) ஒரு கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் கிளன் டர்னர் இன்னொரு கோல் அடித்தார். போராடிய இந்திய அணிக்கு 53வது நிமிடத்தில் ராஜ்பால் சிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். 65வது நிமிடத்தில் குர்பாஜ் சிங் தவறு செய்ய, "பெனால்டி ஸ்டிரோக்' வழங்கப்பட்டது. இதனை அருமையாக தடுத்த இந்திய கோல்கீப்பர் ஆட்ரியன் டிசோசா, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடரில் தனது முதல் வெற்றியை பெற்றது.
----------------
500வது போட்டி
கடந்த 1971ல் உலக கோப்பை ஹாக்கி தொடர் முதன் முதலாக நடந்தது. தற்போது 12வது தொடர் டில்லியில் நடக்கிறது. இதில், நேற்று தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து மோதிய லீக் போட்டி, உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் 500வது போட்டியாக அமைந்தது.
|