தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலககோப்பை ஹாக்கி, லீக் போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி "டிரா' செய்தது.
உலககோப்பை ஹாக்கி தொடர் டில்லியில் நடக்கிறது. தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடக்கும் இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. முன்னதாக இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணி, ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.
அசத்தல் துவக்கம்:
பரபரப்பாக நடந்த இப்போட்டியின் 8 வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்க வீரர், நாரிஸ் ஜோன்ஸ் சூப்பர் கோல் அடித்தார். இந்திய வீரர்களின் தடைகளை மின்னல் வேகத்தில் தகர்த்தெறிந்த இவர், தென் ஆப்ரிக்காவுக்கு முன்னிலை பெற்று தந்தார். இதற்கு 17 வது நிமிடத்தில் இந்தியாவின் சர்வன்ஜித் சிங் பதிலடி கொடுத்தார். பிரப்ஜோத் சிங் கொடுத்த "பாசை' பெற்றுக் கொண்ட இவர், சூப்பர் கோலடித்தார்.
திவாகர் அபாரம்:
ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை அர்ஜூன் வீணடித்தார். அடுத்து 24 வது நிமிடத்தில் மற்றொரு "பெனால்டி கார்னர்' வாய்ப்பை, சிவேந்திரா சிங் கோட்டை விட்டார். ஆனால் சுதாரித்துக் கொண்ட இவர், திவாகருக்கு "பாஸ்' செய்தார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட திவாகர், கோலடித்து அசத்தினார். முதல் பாதியில் இந்திய அணி 2-1 கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
தென் ஆப்ரிக்கா பதிலடி:
இரண்டாவது பாதியின் 39 வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் ரீட் ராஸ் கோலாக மாற்றினார். 47 வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்கா மற்றொரு கோலடிக்க, இந்தியா 2-3 கணக்கில் பின்தங்கியது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாகப் போராடியது. கடைசியில் 66 வது நிமிடத்தில் சிவேந்திரா சிங், ஒரு கோலடித்தார். இதன் மூலம் இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பியது. இறுதியில் இப்போட்டி 3-3 கணக்கில் "டிராவில்' முடிந்தது. லீக் போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி, ஒரு "டிராவை' பதிவு செய்த இந்திய அணி, 4 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 4 வது இடத்தை பெற்றது. இந்திய அணி, 7 வது மற்றும் 8 வது இடத்துக்கான போட்டியில், மோத உள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா:
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியின் 24 வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை, பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் கோலாக்கினார். இதன் மூலம் முதல் பாதியில் பாகிஸ்தான் 1-0 கணக்கில் முன்னிலை வகித்தது. இதற்கு இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் டெஸ்மாண்ட் அப்பாட் பாகிஸ்தானின் தற்காப்பை தாண்டி சூப்பர் கோல் அடித்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், ஆட்டத்தின் 68 வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். பாகிஸ்தான் கடுமையாகப் போராடிய போதும், கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்க வில்லை. இறுதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் லீக் போட்டிகளின் முடிவில் 12 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. வெறும் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அணி, 9 வது மற்றும் 10 வது இடத்துக்கான போட்டியில் மோத உள்ளது.
இங்கிலாந்து ஏமாற்றம்:
"பி' பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே கோல் அடிக்க இரு அணிகளும் கடுமையாகப் போராடின. ஆட்டத்தின் 13, 27, 33 மற்றும் 34 வது நிமிடங்களில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இங்கிலாந்து அணி கோட்டை விட்டது. ஒரு வழியாக முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் ஸ்பெயினுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. பாவ் குயிமேட் அடித்த "சூப்பர் ஷாட்' கோலாக மாறியது. இதன் மூலம் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் எடுபடவில்லை. ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் தடைகளை கடந்து பந்தை சூப்பராக "பாஸ்' செய்த ஸ்பெயின் வீரர் டுபாவ், கோலடித்தார். பல வாய்ப்புகளை கோட்டை விட்ட இங்கிலாந்து கடைசி வரை கோலடிக்க வில்லை. இறுதியில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் 4 லீக் போட்டிகளில், தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, நேற்று முதல் தோல்வியை பதிவு செய்தது.
நேற்றைய போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்ற போதும், பி' பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 5 மற்றும் 6 வது இடத்துக்கான போட்டியில் ஸ்பெயின் அணி விளையாட உள்ளது.
|