சென்னை நகரில் இன்னும் 3 மாதங்களில் மினி பஸ்கள் ஓட்டப்படும். முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைப்பார் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு சட்டசபையில் இன்று அறிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
சென்னையில் ஆட்டோக்களை அதிகரிப்பது போல ஷேர் ஆட்டோக்களை அதிகரிக்க முடியாது. அதனால் மாநகர பேருந்துகளின் வசூல் பாதிக்கப்படும். அதே சமயம் கனெக்டிங் சர்வீஸ் எனப்படும் இணைப்புச் சேவை என்ற பெயரில் குறுகிய தெருக்கள் உள்ள பகுதிகளில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக மினி பேருந்துகள் இன்னும் 3 மாதத்தில் இயக்கப்படும். இதை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.
சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம், சிம்டிஏ நிர்வாகம், மாநகராட்சி ஆகியவை ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளை கொண்டு உருவாக்கப்படும் இந்த புதிய அமைப்புக்கு சிஎம்டிஏ போல சட்ட அங்கீகாரத்தை மத்திய அரசு அளிக்க உள்ளது.
இந்த அமைப்பு உருவாக சில காலமாகும். இந்த பெருந்திட்டப் பணிகள் 88 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும்.
சென்னை மாநகர பகுதியில் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெளி வட்ட சாலை அமைக்கும் பணியும் செயல்படுத்தப்பட உள்ளது. இது தவிர ரூ.16, 285 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டமும் 45 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
மேலும், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 207 இடங்களில் சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன.
மாதந்தோறும் அதிகாரிகளை அழைத்து மாநகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார் நேரு.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "3 மாதத்தில் சென்னையில் மினி பஸ்!" ?