Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
பென்னாகரத்தில் இன்று(03/03/2010) மனுத்தாக்கல் ஆரம்பம் : தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி, இன்று மனு தாக்கல் துவங்குகிறது.தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் இன்பசேகரன், அ.தி.மு.க., சார்பில் அன்பழகன், பா.ம.க., சார்பில் தமிழ்க்குமரன், தே.மு.தி.க., சார்பில் காவேரிவர்மன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் சக்தி கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் பிரபாகர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "மார்ச் 1ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு, அதன் பின் பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்க உள்ளன. எனவே, தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டது.இம்மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது.

தேர்தல் கமிஷன் சார்பில் சீனியர் வக்கீல் ராஜகோபாலன் வாதிட்டதாவது: அரசியலமைப்புச் சட்டப்படி, தேர்தல் நடவடிக்கையில் கோர்ட் தலையிடக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, காலியிடம் உருவான ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்குப் பிறகு, குறைந்தபட்சம் ஓர் ஆண்டு இருக்க வேண்டும்.கடந்த டிசம்பர் முதல் தேதி காலியிடம் உருவானது. ஜனவரி 20ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது; பொங்கல் பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, மார்ச் 27ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அனுப்பிய கடிதத்தில், மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் ஒலிபெருக்கி, மைக், வாகனங்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். தேர்வு நடக்கும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும் மைக், ஒலிபெருக்கிகளை, "ஆப்' செய்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.காலை 6 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்கு பின்னரும் பிரசாரம் செய்யக் கூடாது. தேர்வு மையங்கள் அருகில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு ராஜகோபாலன் வாதிட்டார்.

இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "நிபந்தனைகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகிறதா என்பதை கலெக்டர் பார்க்க வேண்டும். அப்போது தான், அந்தப் பகுதியில் தேர்வு எழுதும் 8,000 மாணவர்களுக்கு அசவுகரியம் ஏற்படாது."தேர்தல் நடவடிக்கைகளில் கோர்ட் தலையிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. பிரதிநிதித்துவம் இல்லாமல் தொகுதியை காலியாக வைத்திருக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் மனு தாக்கல் இன்று துவங்கி, வரும் 10ம் தேதி வரை பெறப்படுகிறது. மனு பரிசீலனை 11ம் தேதி. 13ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாள். அன்று வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, 30ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை மையம் ஆய்வு : பென்னாகரம் தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கை மையம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்படுகிறது.இதற்கான இடத்தை நேற்று காலை, கலெக்டர் அமுதா பார்வையிட்டு நிருபர்களிடம் கூறும்போது, ""பென்னாகரம் தொகுதியில் 250 ஓட்டுச் சாவடிகள் மூலம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக 750 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. இந்த இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளன. இதுவரை, தேர்தல் விதி மீறல் குறித்து 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., மற்றும் பா.ம.க., மீது தலா 13ம், அ.தி.மு.க., மீது மூன்று வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.

பொதுத்தேர்வு மாணவர்களுக்காக ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்காமல் இருக்க, பென்னாகரம் தொகுதியில் 10 ஓட்டுச் சாவடிகள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 23ம் தேதி துவங்குகிறது. பென்னாகரம் இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இதனால், வழக்கமாக ஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்களில் தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் பாதிக்காத வகையில் ஓட்டுப் பதிவு மையங்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளன.பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஓட்டுச் சாவடியும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஓட்டுச் சாவடிகளும் இயங்குவது வழக்கம். இந்த ஐந்து ஓட்டுச் சாவடிகளும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யவும், அதேபோல் பாப்பாரப்பட்டியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழக்கமாக நடைபெறும் மூன்று மையங்களும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மையங்களும் துவக்கப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "பென்னாகரத்தில் இன்று(03/03/2010) மனுத்தாக்கல் ஆரம்பம் : தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு" ?
No public opinions yet.
Login to say your opinion about "பென்னாகரத்தில் இன்று(03/03/2010) மனுத்தாக்கல் ஆரம்பம் : தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு"